WTC Final: ஸ்காட் போலண்டிற்கு பதிலாக ஹேசில்வுட்டை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சீசனுக்கான இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
மேற்கொண்டு இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற கருத்து கணிப்புகளையும் முன்னாள் வீரர்கள் வெளியிட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் தலைமையிலான ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் வரிசையில் ஸ்காட் போலாண்டிற்கு பதிலாக, அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை லெவனில் சேர்க்க வேண்டும் என முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதரித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “இது மிகவும் கடினமான தேர்வாக இருக்கும், ஆனால் ஹேசில்வுட் முழு உடற்தகுதியுடன் இருந்தால், ஸ்காட் போலண்டை விட அவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும் ஹேசில்வுட் லெவனில் சேர்க்கப்படுவதற்கு நிச்சயமாக இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இங்கிலாந்தில் உள்ள நிலைமைகள், மற்றொன்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம். இதில் லார்ட்ஸின் மைதானம் என்று கூறியதற்கான காரணம் ஹேசில்வுட்டிற்கு கிளென் மெக்ராத்திற்கு உள்ள ஒற்றும தான்.
ஏனெனில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் க்ளென் மெக்ராத்தின் சாதனையை நீங்கள் சரிபார்க்க வேண்டும். மேலும் மெக்ராத்தால் பந்தை பின்னால் சாய்த்து அல்லது விலகிச் சென்று, இரு முனைகளிலிருந்தும் ஆபத்தான பந்துவீச்சாளராக இருந்துள்ளார். இதன் காரணமாக ஹேசில்வுட் தனது உயரத்தைப் பயன்படுத்தி இதேபோன்ற ஒன்றைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். மேற்கொண்டு ஆஸ்திரேலியாவைப் போல இங்குள்ள ஆடுகளங்கள் அவ்வளவு வேகமானவை அல்ல.
Also Read: LIVE Cricket Score
எனவே உங்களுக்கு கூடுதல் உயரமும் பவுன்ஸும் தேவை, அதனை ஜோஷ் ஹேசில்வுட்டால் வழங்க முடியும். இதன் காரணமாகவே ஸ்காட் போலாண்டிற்கு பதிலாக நான் ஜோஷ் ஹேசில்வுட்டை தேர்வு செய்வேன். இருப்பினும் நான் ஸ்காட் போலாண்டின் மிகப்பெரும் ரசிகன். ஆனால் அணியின் தேவையைப் பார்க்கும் போது போலண்டிற்கு பதிலாக ஹேசில்வுட் லெவனில் இடம்பெறுவது அணிக்கு கூடுதல் சாதகத்தை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.