கவாஸ்கர், சச்சின் வரிசையில் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இப்போட்டிகான இந்திய அணியில் ராஜத் பட்டிதாரும், இங்கிலாந்து அணியில் சோயப் பஷீரும் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்களிலும், ஷுப்மன் கில் 34 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில சாதனை பட்டியளில் இடம்பிடித்துள்ளார். அதன்படி குறைந்த வயதில் அதிக டெஸ்ட் சதங்களை பதிவுசெய்த வீரர்கள் பட்டியளில் சுனில் கவாஸ்கர் (4 சதங்கள்) பின் யஷஸ்வின் ஜெய்ஸ்வால் (2 சதங்கள்)இடம்பிடித்துள்ளார். மேலும் 22 வயதிற்குள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சதமடித்த வீரர்கள் பட்டியளிலும் யஷஸ்வி ஜெஸ்ய்வால் இடம்பிடித்துள்ளார்.
ஏனெனில் இவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை வெஸ்ட் இண்டீஸிலும், இரண்டாவது டெஸ்ட் சதத்தை இந்தியாவிலும் பதிவுசெய்துள்ளார். இந்த பட்டியளில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சதமடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிக்சர் அடித்து சதம் விளாசிய 16ஆவது இந்திய வீரர் எனும் பெருமையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.