'அவர் ஒரு போட்டியில் அடித்த அளவிற்கு எனது கேரியரில் நான் அதிக சிக்சர்களை அடித்ததில்லை' - அலெஸ்டர் குக்!

Updated: Mon, Feb 19 2024 14:23 IST
Image Source: Google

நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைவரது கவனத்தையும் யஷஸ்வி ஜெய்வால் ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக விசாகப்பட்டினத்தில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

இந்நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். 

இப்போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் இரண்டு இரட்டை சதங்களை விளாசிய மூன்றாவது வீரர் எனும் பெருமை ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ளது. மேலும், இப்போட்டியில் 214 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்ஸில் 14 பவுண்டரி, 12 சிக்சர்களை விளாசினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் எனும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் சாதனையை சமன்செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். 

மேலும் இத்தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மொத்தமாக 20 சிக்சர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 19 சிக்சர்களை அடித்ததே சதானையாக இருந்தது.

 

இந்நிலையில் ஜெய்ஸ்வாலின் இந்த அபாரமான இன்னிங்ஸ் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் “என் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் அடித்த சிக்ஸர்களை விட, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை அடித்துள்ளார் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். அலெஸ்டர் குக்கின் இந்த கருத்து தற்போது வைரலாகியுள்ளது. 

ஏனெனில் இதுவரை 161 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் ஒட்டுமொத்தமாக 11 சிக்சர்களை மட்டுமே அடித்துள்ளார். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் 12 ரன்களை விளாசி அசத்தியதுடன், சாதனை பட்டியளிலும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை