இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி எங்கே? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் பிப்ரவரி 24 முதல் தொடங்குகிறது.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார், அக்ஸர் படேல் போன்றோர் இடம்பெற்றார்கள். ஆனால் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் நால்வரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்படுவது வருத்தம் அளிக்கிறது. கரோனா சூழல், தேர்வுக்குழு உறுப்பினர்களின் வேலையை எளிதாக்கியுள்ளது. அவர்கள் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை (வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார்) கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்திருக்க மாட்டீர்கள்.
இப்போது வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார் ஆகிய இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாது. அவர்களைச் சுத்தமாக மறந்து விட்டார்கள். டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அஸ்வினும் காயம் காரணமாக இப்போது அணியில் இல்லை. காயம் இல்லை என்றாலும் அவரை அணியில் சேர்த்துக் கொண்டிருப்பீர்களா எனத் தெரியாது.
என்ன நடக்கிறது? அணித் தேர்வில் நிலைத்தன்மை இல்லை. நீண்ட காலத் திட்டம் இல்லை. திட்டம் வகுத்தாலும் அதை எப்படி அடைவீர்கள்? ஏனெனில் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய வீரரைத் தேர்வு செய்கிறீர்கள். புதிய வீரர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் தந்து அவர்களைத் தயார்படுத்தாவிட்டால் நீங்கள் அநியாயமாக நடந்துகொள்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே இதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.