ராஜ்கோட் பிட்ச் பற்றி எனக்கு நன்றாக தெரியும் - ரவீந்திர ஜடேஜா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டியில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியதுடன், முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பென் டக்கெட் சதமடித்து அசத்தியதுடன் 153 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். ஆனால் அவரைத் தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவற இங்கிலாந்து அணி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானதுடன், முதல் இன்னிங்ஸில் 126 ரன்கள் பின் தங்கியது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 214 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 68 ரன்களையும் சேர்க்க 430 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
இதன்மூலம் இலங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் சதம் மற்றும் 5 இக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பின் பேசிய ரவீந்திர ஜடேஜா, “இப்போட்டியில் நான் ஐந்தாவது விக்கெட்டாக களமிறங்கியதும், ரோஹித் சர்மாவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை உருவாக்க நினைத்தேன். ஏனெனில் அச்சமயத்தில் நாங்கள் கடினமான சூழ்நிலையில் இருந்தோம். அதனால் நான் பேட்டிங்கில் எனது பாணியில் விளையாடுவதுடன், தேவையில்லாத ஷாட்கள் விளையாடுவதை முயற்சிக்க கூடாது என்ற எண்ணத்துடன் இருந்தேன்.
அதனால் பந்தைப் பார்த்து அதற்கேற்றது போல் விளையாடினேன். ஏனெனில் இந்த விக்கெட்டைப் பற்றி எனக்குத் தெரியும். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால், எப்போதும் அது சாதகமான முடிவாக அமையுன் என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில் இங்கு இரண்டாம் பாதி ஆட்டத்தின் போது பந்து திரும்புவதுடன் பேட்டர்கள் விளையாடவும் கடினமாக இருக்கும் .
ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தவுடன், இந்த விக்கெட்டில் முதலில் பேட் செய்து, இரண்டாவது பந்து வீசலாம், இதைதான் நாங்களும் எதிர்பார்த்தோம் என்று நினைத்தேன். இந்த விக்கெட்டில் நீங்கள் எளிதாக விக்கெட்டுகளைப் பெற முடியாது, அதற்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் சரியான லைன் அண்ட் லெந்தில் பந்துவீசினால் அதற்கான பரிசாக விக்கெட்டுகளும் உங்களும் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.