அஸ்வினை சூசகமாக சாடிய யுவராஜ் சிங் - ரசிகர்கள் கொந்தளிப்பு!
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து ஒன்று பவுண்டரிக்கு சென்றது. அதனை டைவ் அடித்து பட்லர் தடுத்து நிறுத்தினார். எனினும் அவராக நடுவரை அழைத்து தனது கால்கள் பவுண்டரி எல்லையை தொட்டதா என பரிசோதிக்க சொன்னார். இது ரசிகர்கள் மனதை வென்றது.
இதுகுறித்து யுவ்ராஜ் சிங் ட்விட்டரில் புகழ்ந்தார். அதில், கிரிக்கெட்டில் இன்னும் ஜெண்டில்மேன்கள் உள்ளனர். மற்ற வீரர்கள் ஜாஸ் பட்லரை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக சக அணி வீரரே பட்லரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என சூசகமாக சாடினார்.
அவர் குறிப்பிட்டது ராஜஸ்தான் வீரர் அஸ்வினை தான். ஐபிஎல் வரலாற்றில் ஜாஸ் பட்லர் - அஸ்வின் மோதலை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. மன்கட் முறையில் பட்லரை அஸ்வின் அவுட்டாக்கியது, ஒரு சிறந்த பவுலருக்கு அழகல்ல என பல விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு அஸ்வின் பதிலடியும் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது யுவ்ராஜ் சிங் மீண்டும் அதே பிரச்சினைக்குள் அஸ்வினை இழுத்துவிட்டது பேசுப்பொருளாகியுள்ளது. இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின், கூடிய விரைவில் தகுந்த பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.