ENG vs IND, 2nd ODI: லார்ட்ஸில் வரலாற்று சாதனை நிகழ்த்திய சஹால்!
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தற்போது மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜேசன் ராய் 23 ரன்களும், பாரிஸ்டோ 38 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.
இதன்பின் களமிறங்கிய ஜோ ரூட் (11), ஸ்டோக்ஸ் (21), பட்லர் (4) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். அடுத்ததாக களத்திற்கு வந்த லியம் லிவிங்ஸ்டன் 33 ரன்களும், நீண்ட நேரம் தாக்குபிடித்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொய்ன் அலி 47 ரன்களும், டேவிட் வில்லே 41 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களத்திற்கு வந்த வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்ததால் 49 ஓவர்கள் முடிவில் 246 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளையும், பும்ராஹ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தநிலையில், இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் யுஸ்வேந்திர சாஹல், ஒருநாள் போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில், ஒரே போட்டியில் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் லெக் ஸ்பின்னர் என்ற பெருமையை சாஹல் பெற்றுள்ளார். அதே போல் லார்ட்ஸ் மைதானத்தில், ஒரே போட்டியில் நான்கு விக்கெட்டுகள் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சாஹல் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு கடந்த 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில், அமர்நாத் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 39 ஆண்டுகளுக்கு பிறகு சாஹல் இந்த சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.