ஐசிசி தொலைக்காட்சி உரிமத்தை சோனியிடம் ஒப்படைத்தது ஸ்டார் நிறுவனம்!
இதில், இந்தியாவுக்கான டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் முதலில் நடந்தது. ஆன்லைனில் நடைபெறாமல், பாரம்பரிய முறைப்படி சீலிடப்பட்ட கவரில் ஒப்பந்த தொகையை நிறுவனங்கள் கோரி இருந்தன.
இதில், முதல் இடம் பிடிக்கும் நிறுவனத்திற்கும், 2ஆவது இடம் பிடிக்கும் நிறுவனத்திற்கும் கோரிய ஒப்பந்தம் இடைவெளி 10 சதவீதத்திற்கு கீழ் இருந்தால், 2ஆவது ரவுண்ட் ஏலம் ஆன்லைனில் நடைபெறும் என கோரியிருந்தது.
இந்த ஏலத்தில் ஐசிசி 16 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்த்தது. ஆனால், ஸ்டார், டிஸ்னி நிறுவனம் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வென்றது. அதற்கு அடுத்தப்படியாக உள்ள சோனி நிறுவனம், 17 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒப்பந்தம் கோரி இருந்தது. முதல் மற்றும் 2ஆவது இடத்திற்கான இடைவெளி 10 சதவீதத்திற்கு மேல் இருந்ததால் டிஸ்னி ஸ்டார் நிறுவனம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல், ஐசிசி தொடர், ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் என அனைத்தையும் ஸ்டார் நிறுவனமே வாங்கியது. இந்த நிலையில் தான் தற்போது பெரிய டிவிஸ்ட் நடந்துள்ளது.
வரும் 2024 டி20 உலக கோப்பை, 2025 சாம்பியன்ஸ் கோப்பை, 2026 டி20 உலகக் கோப்பை மற்றும் 2027 ஐசிசி உலகக் கோப்பை என 4 தொடர்களையும் இந்தியாவில் ஸ்டார் நிறுவனம் தான் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய உள்ளது.
இந்த நிலையில், ஸ்டார் டிஸ்னி நிறுவனம் தனது தொலைக்காட்சி உரிமத்தை மட்டும் சோனி மற்றும் ஜி நிறுவனத்துக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. டிஸ்னி நிறுவனத்தின் இந்த முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதன் மூலம் இனி அனைத்து ஐசிசி தொடர்களையும், இனி சோனி தொலைக்காட்சியில் மட்டும் தான் பார்க்க முடியும்.
தற்போது தொலைக்காட்சியை விட மக்கள் செல்போன்களில் தான் அதிகளவில் டிஜிட்டல் ஆப்கள் மூலம் கிரிக்கெட் போட்டியை நேரலையில் காண்கின்றனர். கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் கண்டுகளித்தனர். இதனால் தொலைக்காட்சி மூலம் லாபத்தை பார்க்க முடியாது என்று கூறி, அதனை சோனி நிறுவனத்திற்கு விற்று லாபத்தை பார்த்துள்ளது.