ZIM vs AFG, 2nd ODI: ஜிம்பாப்வேவை 54 ரன்களில் சுருட்டி ஆஃப்கான் இமாலய வெற்றி!

Updated: Thu, Dec 19 2024 19:09 IST
Image Source: Google

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு செதிகுல்லா அடல் - அப்துல் மாலிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் பறக்கவிட்டு அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்த்னர். அத்துடன் இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 191 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த செதிகுல்லா அடல் சர்வதேசா ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்துல் மாலிக் 11 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 84 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.  அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்சாய் 5 ரன்களிலும், ரஹ்மத் ஷா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் சிறப்பாக விளையாடி வந்த செதிகுல்லா அடலும் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 104 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி - முகமது நபி இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.  இதில் முகமது நபி 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க,  இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி 29 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளி இழந்து 286 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் நியூமன் நியாம்ஹுரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் பென் கரண் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான மருமணியும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டியான் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், கேப்டன் கிரேய்க் எர்வின் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க ஜிம்பாப்வே அணி 11 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சீன் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ரஸா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்து முயற்சியில் இறங்கினர். 

இதில் சீன் வில்லியம்ஸ் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய பிரையன் பென்னட், நியாம்ஹூரி, ரிச்சர்ட் ந்ங்கரவா, டிரெவர் குவண்டு, மபோசா உள்ளிட்டோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார். அதேசமயம் இறுதிவரை களத்தில் இருந்த சிக்கந்தர் ரஸா 19 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 54 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்லா கசான்ஃபர், நவீத் ஸத்ரான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப்  பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆஃப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை மறுநாள் (டிசம்பர் 21) ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை