ZIM vs BAN: சௌமியா சர்கார் அபாரம்; தொடரை வென்றது வங்கதேசம்!
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மாதேவெர் - சகாப்வா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 193 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மாதேவெர் 54 ரன்களையும், சகாப்வா 48 ரன்களையும் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் சௌமியா சர்கார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி முகமது நைம், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சௌமியா சர்கார் அரைசதமடித்து அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்தார்.
இறுதில் ஷாமின் ஹொசைன் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் வங்கதேச அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சௌமியா சர்கார் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.