சகாப்வா, ரியான் பர்ல் அசத்தல்; வங்கதேசத்திற்கு 299 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்குய ஜிம்பாவே அணிக்கு மருமணி, பிராண்டன் டெய்லர் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் அபாரமாக விளையாடுய சகாப்வா அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய டியன் மியர்ஸ் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சகாப்வா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 84 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ரஸா - ரியான் பர்ல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின்னர் சிக்கந்தர் ரஸா 57 ரன்களில் ஆட்டமிழக்க, ரியான் பர்லும் 59 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 49 ஓவர்களிலேயே ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 298 ரன்களை எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் முஸ்தபிசூர், சைஃபுதின் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி விளையாடி வருகிறது.