முத்தரப்பு டி20 தொடர்: டெவால்ட் பிரீவிஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
Zimbabwe T20I Tri-Series: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் டெவால்ட் பிரீவிஸ் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயண் செய்து அந்த அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மதவெரே மற்றும் பிரையன் பென்னட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மதவெரே ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய கிளைவ் மடான்டே 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் பிரையன் பென்னட்டுடன் இணைந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பிரையன் பென்னட் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரியான் பார்லும் தனது பங்கிற்கு 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ரஸா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதேசமயம் மறுபக்கம் விளையாடிய தஷிங்கா முசேகிவா 9 ரன்களுக்கும், டோனி முன்யோங்கா ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிக்கந்தர் ரஸா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 54 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி, நந்த்ரே பர்கர் மற்றும் பீட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரிட்டோரியஸ் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, ரிஸா ஹென்றிக்ஸ் 11ரன்களைச் சேர்த்து நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரஸ்ஸி வேண்டர் டூசெனும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ருபின் ஹர்மான் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அதிரடியாக விளையாடியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவால்ட் பிரீவிஸ் 17 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களைச் சேர்த்திருந்த ருபின் ஹர்மானும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் அடுத்து களமிறங்கிய கார்பின் போஷும் அதிரடியாக விளையாடினார்.
Also Read: LIVE Cricket Score
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கார்பின் போஷ் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களையும், ஜார்ஜ் லிண்டே 3 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.