ZIM vs IRE, 3rd ODI: மழையால் ஆட்டம் ரத்து; கோப்பை பகிர்ந்தளிப்பு!
ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் விளையாடி வருகிறதில். இதில் முன்னதாக நடைபெற்ற டி20 தொடரில் ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இன்னசெண்ட் கையா - சாமு ஷிபாபா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷிபாபா 16 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஆட்டத்தில் 13 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது.
அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டி கைவிடப்படுவதாக போட்டி நடிவர்கள் அறிவித்தனர். ஏற்கெனவே இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் ஒருநாள் தொடர் இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும் இத்தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதம் என கலக்கிய அயர்லாந்து வீரர் ஹேரி டெக்டர் தொடர் நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.