ZIM vs WI,1st Test:மழையால் முன்கூட்டியே முடிந்த ஆட்டம்; வலிமையான நிலையில் விண்டீஸ்!
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக டெஸ்டில் ஒரு வெற்றி கூட பெறாத மோசமான நிலையை மாற்ற கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் கிரேய்க் பிராத்வைட் - டேகனரின் சந்தர்பால் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியது.
இதற்கிடையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 51 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 112 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் முதலாவது டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 112 ரன்களைச் சேர்த்தது. இதில் பிராத்வைட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் தலா 55 ரன்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர்.