ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் தொஹனி 3, பால் ஸ்டிர்லிங் 13 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி - ஹேரி டெக்டர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கேப்டன் பால்பிர்னி சதமடித்து அசத்த, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி டெக்டரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 121 ரன்கள் எடுத்திருந்த பால்பிர்னி ரிட்டையர் ஹர்ட் முறையில் களத்திலிருந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து வந்த ஜார்ஜ் டக்ரெல், கர்டிஸ் காம்பேர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஹேரி டெக்டர் 102 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் வெஸ்லி மதவெரே 2, இன்னசெண்ட் கையா 19 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் எர்வின் - பேலன்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
பின் 38 ரன்களில் எர்வின் ஆட்டமிழக்க, 23 ரன்களில் பேலன்ஸும் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த சிக்கந்தர் ரஸா - ரியான் பர்ல் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கிடையில் மழை குறுக்கிட்டத்தன் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு 37 ஓவர்களில் 214 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா 48 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த ரியான் பர்ல் அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும் கடைசி ஓவரில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற 12 ரன்களை தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய ஹம் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தின் சுவாரஸ்யத்தைக் கூடினார்.
இறுதியில் ஒரு பந்திற்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை எதிர்கொண்ட ரியான் பர்ல் பவுண்டரி விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 37ஆவது ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லந்து அணியை வீழ்த்தில் த்ரில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 59 ரன்களை எடுத்த ரியான் பர்ல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.