ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் மறைவு - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக செயல்பட்டவர் ஹீத் ஸ்ட்ரீக். ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,990 ரன்களும், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2943 ரன்களும் விளாசி இருக்கிறார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 216 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 219 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இன்று வரையிலும் ஜிம்பாப்வே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ஹீத் ஸ்ட்ரீக் தான்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின், கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்தார். அதேபோல் ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த வாரம் ஹீத் ஸ்ட்ரீக் காலமானதாக தகவல் வெளியானது.
ஆனால் அந்த செய்தி உண்மையில்லை என்று ஹீத் ஸ்ட்ரீக் தன்னிடம் உறுதி செய்ததாக ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஹென்ரி ஒலங்கா தெரிவித்தார். தற்போது ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக அவரது மனைவி நாடின் அறிவித்துள்ளார். ஹீத் ஸ்ட்ரீக் மனைவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், எனது வாழ்க்கையின் அனைத்துமாய் இருந்த, என் குழந்தைகளுக்கு மிகச்சிறந்த தந்தையுமான ஹீத் ஸ்ட்ரீக், தேவதூதர்களால் அழைத்து செல்லப்பட்டார்.
அதேபோல் முன்னாள் வீரர் ஹென்ரி ஒலங்காவும் ஹீத் ஸ்ட்ரீக் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மறைவு செய்தி வந்த போது வதந்தி என்று பின்னர் தெரிய வந்த நிலையில், அதேபோல் இதுவும் வதந்தியாக மாறிடாதா என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.