ZIM vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது ஜிம்பாப்வே

Updated: Tue, Aug 02 2022 20:27 IST
Image Source: Google

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், 31ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன.

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி இம்முறையும் பேட்டிங் செய்வதாகவே அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு சகாப்வா - கிரேக் எர்வின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

பின் 17 ரன்களில் சகாப்வா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வெஸ்லி மதவெரே, சிக்கந்தர் ரஸா, சீன் வில்லியம்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதைடடுத்து மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கிரேக் எர்வினும் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த மில்டன் ஷும்பா 4 ரன்களுக்கு நடையைக் கட்டினார். 

பின்னர் ஜோடி சேர்ந்த ரியான் பர்ல் - லுக் ஜொங்வா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அதிலும் நசும் அஹ்மத் வீசிய 15ஆவது ஓவரில் ரியான் பர்ல் அடுத்தடுத்து 5 சிக்சர், ஒரு பவுண்டரியை விரட்டி 34 ரன்களைச் சேர்த்தார்.

இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பர்ல் 24 பந்துகளில் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் ரியான் பர்லும் 54 ரன்களில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் 13 ரன்களிலும், பர்விஸ் ஹொசைன் 2 ரன்களிலும் விக்டர் நயாச்சியின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய வங்கதேச வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வண்ணமே இருந்தனர்.

இதில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட அஃபிஃபி ஹொசன் 39 ரன்களையும், மஹ்மதுல்லா 27 ரன்களைச் சேர்த்தனர். மற்றவீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் விக்டர் நயாச்சி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் வங்கதேசத்திற்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரியான் பர்ல் ஆட்டநாயகனாகவும், சிக்கந்தர் ரஸா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை