ஐபிஎல் 2021: தொடக்கமும், சிக்கல்களும்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது.
முன்னதாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதா, அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதா என்ற விவாதம் எழுந்திருந்தது. ஆனால் பிசிசிஐ நடப்பாண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் மட்டுமே நடத்த திட்டமிட்டிருந்தது.
அதன்படி ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனின் முதல் பாதி ஆட்டம் இந்தியாவில் நடத்தப்பட்டது. மேலும் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, பயோ பபுள் முறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக டெல்லி அணியின் அக்சர் படேல், நிதீஷ் ராணா, தேவ்தவ் படிகல் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பாட்டது, மற்ற வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்பு வீரர்கள் தொற்றிலிருந்து மீண்டு, வீரர்கள் அனைவரும் தொடரில் பங்கேற்றனர். இதற்கிடையில் கரோனா அச்சம் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் உள்பட பல வீரர்கள் தொடரிலிருந்து விலகினர்.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் சிலண்டர்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால் சச்சின், பாட் கம்மின்ஸ், தவான் போன்ற கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி செய்து வந்தனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தற்போது ஐபிஎல் வீரர்களையும் தாக்க தொடங்கிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கும் தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் நேற்று நடைபெற இருந்த கொலகத்தா, பெங்களூர் அணிக்கிடையேயான லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இவர்களை தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிஎஸ்கேவின் உரிமையாளர் காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் லக்ஷ்மிபதி பாலாஜி, பேருந்து பராமரிப்பாளர் ஒருவர் ஆகிய மூன்று பேருக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதன்பிறகு சிஎஸ்கே வீரர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் வந்திருக்கிறது.
இதனால் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் அனைத்தையும் மும்பையில் நடத்தலாம் என்ற எண்ணத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் திட்டமிட்டு வந்தனர்.
இதற்கிடையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த விருத்திமான் சஹா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைச் சேர்ந்த அமித் மிஸ்ரா ஆகியோருக்கு இன்று கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகிகள் நடத்திய அவசர கூட்டத்தில் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய ஒருமனதாக முடிவு எடுத்துள்ளனர். வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர். மேலும், இந்த சீசனில் உதவியாக இருந்த சுகாதாரத்துறையினர், வீரர்கள், ஊழியர்கள், அணி உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள், பார்ட்னர்கள் என அனைவருக்கும் பிசிசிஐ நன்றியை தெறிவித்துள்ளது.