சச்சின்... இந்தப் பெயரைக் கேட்கும்போதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்வு ஏற்படும். ஆல் இந்தியா ரேடியோ கமெண்ட்ரிகளில் கிரிக்கெட் கேட்கத் தொடங்கி பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து, கலர் டிவியில் பார்த்து பிரமித்த வேளையில் நேற்று வந்த லைவ் ஸ்டீரிமிங்கிலும் வலம் வந்தவர் சச்சின்.

Advertisement

இவர் கிரிக்கெட் விளையாடிய காலக்கட்டத்தில், இவருடன் சேர்ந்து நாமும் இந்தியாவும் ஒன்றாக வளர்ந்தோம். இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால் அந்த மதத்தின் கடவுள் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் ஆடுகிறார் என்றால் பள்ளி மாணவர்களுக்கு 'காய்ச்சல்' வந்துவிடும். இந்தியாவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியில் இருக்கும். களை எடுக்கச் செல்பவர்கள் இருந்து, கார்ப்ரேட் கம்பேனிகளில் வேலை செய்பவர் வரை யாரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள்.

Advertisement

பஞ்சாயத்து போர்டு தொலைக்காட்சியிலிருந்து சாலையோரக் கடைகளில் இருக்கும் தொலைக்காட்சி வரை அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதும். அவர் ஆட்டம் இழந்துவிடக் கூடாது என்பதற்காக தொலைக்காட்சிகளுக்கு பூஜை செய்யப்படும்.

அந்த ஒற்றை மனிதன் வானத்தைப் பார்த்து பேட்டை உயர்த்திவிட்டு, மைதானத்திற்குள் காலடி எடுத்து வைப்பதை பார்த்தவுடன் அனைவரிடமும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். குத்துச் சண்டைக்கு ஒரு முகமது அலி, கூடைப்பந்துக்கு ஒரு மைக்கேல் ஜோர்டன், கால்பந்துக்கு ஒரு பீலே போல கிரிக்கெட்டுக்கு சச்சின்.

உலகில் கிரிக்கெட்டில் அதிக செல்லப் பெயர்களைக் கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் தான். லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர், காட் ஆஃப் கிரிக்கெட் என சொல்லிக் கொண்டே போகலாம். காட் ஆஃப் கிரிக்கெட் என அழைக்கப்படுவது குறித்து ஒரு முறை சச்சினிடம் கேட்டபோது, நான் காட் ஆஃப் கிரிக்கெட் அல்ல. நான் தவறு செய்பவன். கடவுள் தவறு செய்யமாட்டார் என்று கூறினார்.

வாழ்க்கையில் துவண்டு போனவர்களுக்கு சச்சின் என்றும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி. இவரது ஆட்டத்தையும் போராடும் தன்மையையும் பார்த்து வாழ்க்கையில் பிடிமானம் வரவழைத்துக் கொண்டவர்கள் ஏராளம். இந்திய சினிமாவில் கிரிக்கெட் குறித்த அனைத்து படங்களிலும், 'சச்சின் அவுட்டாயிட்டா டிவிய ஆஃப் பண்ணிட்டு போயிருவோம்' என்ற வசனம் டெம்ப்ளேட் ஆகவே பயன்படுத்தப்படும். அந்த அளவிற்கு சச்சின் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார்.

Advertisement

சரியாக 1989... பாகிஸ்தானுக்கு ஒரு சின்னப் பையன் விமானமேறி போகிறான் கிரிக்கெட் ஆடுவதற்கு, அப்போது பாகிஸ்தான் அணியில் இம்ரான் கான், வாக்கர் யூனிஸ், அப்துல் காதர் உள்ளிட்ட பந்துவீச்சு ஜாம்பவான்கள் விளையாடிய காலம் அது. அப்போது அவர்களும் நினைத்திருக்க மாட்டார்கள் - 16 வயது சின்னப் பையன் நம் முன் பேட்டை சுழற்றிக் கொண்டு நிற்க போகிறான் என்று.

அந்தக் காலத்தில் அப்துல் காதரின் பந்துகளில் 1, 2 ரன்கள் எடுப்பதற்கே முன்னணி பேட்ஸ்மேன்கள் தடவிக் கொண்டிருந்த காலம். ஆனால் சச்சின், காதரின் பந்தில் டவுன் தி ட்ராக் இறங்கி வந்து சிக்சர் அடிக்கையில் கிரிக்கெட் உலகம் ‘யார் இந்தச் சிறுவன்’ என தேடத் தொடங்கியது. சச்சின் என்கிற பறவையின் கிரிக்கெட் கனவு மிக வேகமாக வானில் பறக்கத் தொடங்கினாலும், அது எவ்வளவு காலம் வானில் பறக்கிறது எனப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு தொடர்ந்து தனது பேட்டால் பதிலளித்து வந்தார்.

பின்னர் 1994இல் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க 49 பந்துகளில் 82 ரன்கள் அடித்தது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசி ஓவரை வீசி இந்தியாவை வெற்றிபெற வைத்தது, தந்தை இறந்த அடுத்த நாளே விமானம் ஏறி இங்கிலாந்து சென்று சதமடித்தது, சார்ஜாவில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டியது,பாகிஸ்தானுக்கு எதிராக அக்தர் பந்தை பதம் பார்த்தது, எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்டீவ் வாக்கின் கடைசி ஆட்டத்தில் ஒரு கவர் டிரைவ் கூட ஆடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் சதம் அடித்து கெத்து காட்டியது என்று... சச்சின் பற்றி பேசுவதற்கு ஆயிரம் விஷயத்திற்கும் மேல் இருக்கிறது.

Advertisement

ஆனால் பேட்டிங்கில் எவ்வளவு சதங்கள் அடித்தாலும் பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபடாத சச்சின், பந்துவீச்சில் ஒரு விக்கெட் வீழ்த்தி விட்டால் குழந்தையைப் போல் மாறி மிகப்பெரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய வீரர் ஹெய்டனை போல்டாக்கியதும் தனது கைகள் சுற்றி கொண்டாடும் சச்சினை யாருக்குத்தான் பிடிக்காது.

சச்சின் ரசிகர்கள் நினைத்துப் பார்த்தால் தெரியும், பேட்டிங் ஆடுகையில் மட்டும்தான் சச்சின் பொறுப்புடன் ஆடுவார். மற்ற நேரங்களில் சிறு குழந்தையாகவே மைதானத்தில் வலம் வருவார். ஆண்டுகள் கழிய கழிய 
எல்லாவற்றையும் தாண்டி சென்னை மைதானம் சச்சின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளை கொண்டுள்ள மைதானம். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒற்றை ஆளாக நின்று பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டார்.
272 ரன்கள் இலக்கினை எதிர்கொண்டு ஆடுகையில், சச்சினைத் தவிர அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, பாகிஸ்தானின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானதாக பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். 

ஆனால் சச்சின் இந்தியாவை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றபோது 136 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த 4 ரன்களில் இந்தியா ஆல்-அவுட் ஆகி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டியது கிரிக்கெட் உலகத்தை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இந்திய அணியின் ஓய்வறையில் மற்றொரு சம்பவமும் நடந்தது.

Advertisement

அந்தப் போட்டியில் சச்சின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட, அதனை வாங்குவதற்கு சச்சினுக்கு பதிலாக மாற்று வீரர் வந்தார். ஏன் என்று ரசிகர்கள் யாருக்கும் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது... தோல்வியை தாங்க முடியாமல் ஓய்வறையில் சச்சின் சிறு பிள்ளையாய் அழுது கொண்டிருந்தது! இதன் மூலம் கிரிக்கெட்டை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

1996 உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்றதால் இந்த முறை நிச்சயம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அரையிறுதியில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து ஆடிய போது, இலங்கை அணி 50 ஓவர்களில் 251 ரன்களுக்கு எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் 65 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அதற்கடுத்து 22 ரன்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. கிட்டத்தட்ட இந்திய அணியின் தோல்வி உறுதியான நிலையில், மைதானத்திலிருந்த ரசிகர்கள் அதீத உணர்ச்சி பெருக்கினால் கலவரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இலங்கை அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.
சொந்த நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பையை வெல்ல முடியாத இந்திய அணிக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. ஆனால் ஓவ்வொரு முறை ரசிகர்கள் கோபித்துக்கொண்டு கிரிக்கெட் பார்க்கக் கூடாது என முடிவு எடுக்கும் போதெல்லாம் இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் ரசிகர்களிடம் ஒரு மேஜிக் செய்து திரும்ப வரவழைப்பார். இதுதான் லிட்டில் மாஸ்டரின் சீக்ரெட்.

அடுத்து நடைபெற்ற ஒவ்வொரு உலகக் கோப்பையை இந்திய அணிக்கு கிட்டாமல் போக, தனது கனவான உலக கோப்பை வெல்லும் வாய்ப்பை நிறைவேற்ற முடியுமா என சச்சின் பற்றி வெளிநாட்டு நாளிதழ்களும் கிண்டல் செய்யத் தொடங்கின.
2007 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகப்பெரிய தோல்வி! தொடர்ந்து நடைபெற்ற டி-20 உலகக் கோப்பைக்கு முற்றிலும் இளைஞர் அணி. ஆகவே சீனியர் வீரர்களான சச்சின், கங்குலி, லக்‌ஷ்மண், டிராவிட், கும்ளே ஆகியோர் ஒருநாள் அணிகளில் இடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது.

Advertisement

அந்த சந்தேகத்திற்கு பதிலளிக்கும் வகையில் சச்சினை தவிர வேறு யாரும் அடுத்த நடைபெற்ற சீபி தொடரில் இடம்பெறவில்லை. ஊடகங்கள் சச்சினுக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை என நேரடியாகவே எழுதத் தொடங்கின.
அவர்களின் கூற்றுக்கும், விமர்சனங்களுக்கு எல்லாம் அமைதியாக இருந்த சச்சின், தனது பேட்டிங்கால் பதிலடி கொடுத்தார். முதன்முறையாக ஆஸ்திரேலிய மைதானத்தில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். சச்சினுக்கு வயதாகிவிட்டது. பழைய ஷாட்களை ஆட முடியாது எனக் கூறியவர்களுக்கு பிரெட் லீ வீசிய பவுன்சரை அப்பர் கட் செய்து புதிய ஷாட்களை அறிமுகம் செய்துவைத்தார்.

காலத்திற்கு ஏற்றவாறு தன்னைப் புதுப்பிக்காதவர்கள் காலம் தின்றுவிடும். இதனை நன்றாக தெரிந்து கொண்ட சச்சின், எல்போ சிகிச்சைக்குப் பின்னர் தனது வழக்கமான ஷாட்களுடன் தனது உடலமைப்புக்கு ஏற்றவாறு புதிய ஷாட்களை உருவாக்கத் தொடங்கினார்.

2007 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்தியா வெளியேறிய பிறகு, 2011 உலகக் கோப்பைக்காக அப்போதே அவர் தயாராகத் தொடங்கினார். தொடர்ந்து நடைபெற்ற அத்தனைத் தொடர்களில் வெற்றி பெற்று இந்தியா, உலகக் கிரிக்கெட்டை ஆளத் தொடங்கியது.

Advertisement

சச்சினோடு ஆடிய வீரர்கள் ஒவ்வொருவராக ஓய்வினை அறிவிக்க, சச்சினோ இளைஞர்கள் கூட படைக்காத சாதனைகளை படைக்க தொடங்கினார். உச்சபட்சமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசி அதையடுத்து, உலகக்கோப்பையை சச்சின் வென்றெடுப்போம் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

ஒவ்வொரு ஆண்டும் உலக கோப்பையை வெல்வோம் என சச்சின் சொல்லிவிட்டு கிளம்புவார். ஆனால் இந்த முறை சச்சினுக்காக உலகக்கோப்பையை (2011) வென்றெடுப்போம் என யுவராஜ் தொடங்கி, அனைத்து இந்திய வீரர்கள் கூறினர்.
உலகக்கோப்பை என்று வந்துவிட்டால் மாஸ்டர் பிளாஸ்டருக்கு தனி உத்வேகம் பிறக்கும். இந்த முறையும் அதற்கு விதிவிலக்கல்ல. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக சதம் விளாசினார்.

அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுகையில் சச்சின் நிற்கிறார் என்ற பரபரப்பில் நான்கு கேட்ச்சுகளை பாகிஸ்தான் அணியினர் தவறவிட்டனர். அரையிறுதியில் வென்று இந்திய அணி இறுதிக்கு தகுதி பெற்றது. இறுதியில் இலங்கையை எதிர்கொள்ள வேண்டும்.

Advertisement

தொடக்க வீரர்களாக களமிறங்கிய சேவாக் ரன் ஏதும் எடுக்கவில்லை. சச்சின் குலசேகரா வீசிய பந்தில் ஒரு ஸ்ட்ரைட் டிரைவ் அடித்து ஸ்டைலாக நிற்க, மலிங்கா பந்தை தவறாக ஆடி ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

ஆனால் இந்த முறை யாரும் தொலைக்காட்சியை அணைத்து விட்டு யாரும் போகவில்லை. ஏனென்றால் நிற்பது இளைஞர் அணி. அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் கம்பீர், தோனி, யுவராஜ் அதிரடியால் உலக கோப்பையை வென்ற பின்னர், இதற்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன் என்பதைப் போல் மழலையாய் சச்சின் ஓடி வந்தது அவரது ரசிகர்களுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.

உலகக்கோப்பையை வென்று வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்கள் சச்சினைத் தூக்கிக்கொண்டு வலம் வந்த பின்னர், 24 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டை தன் தோள்களில் சுமந்தவரை நாங்கள் சுமக்க கடமைப்பட்டுள்ளோம் எனக் கூறி ரசிகர்களை நெகிழ்வடையச் செய்தனர்.

Advertisement

அதன் பின்னர் வங்கதேச அணிக்கு எதிராக அடித்த 100வது சதம்... சச்சின் மகுடத்தில் இன்னொரு வைரக்கல்லாய் அமைந்தது.
சச்சின் ஓய்வினை அறிவித்து மும்பையில் கடைசிப் போட்டி நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடுகிறார். அப்போது, சச்சின் களமிறங்குகையில், 'சச்சின்.... சச்சின்....' என்ற கீதம் வான்கடே மைதானத்தின் இதயத்துடிப்பாகவே மாறி விட்டது.

ஒவ்வொரு பந்திலும் தனது வாழ்நாள் முழுவதும் ரசித்து ஆடிய ஆட்டத்தை தனது சொந்த மண்ணில் ஆடுகிறார். ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அரைசதம் கடந்து விளையாடினார்.

74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது, சச்சின் பெவிலியன் நோக்கி நடக்கிறார். இந்திய ரசிகர்களின் 24 வருட கிரிக்கெட் சந்தோஷம் ஓய்வு பெறுகிறது. ஒவ்வொரு ரசிகனின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. போட்டிக்கு பின்னர் மைதானத்திற்குள் நுழைந்த சச்சின், பிட்ச்சை தொட்டு வணங்கிவிட்டு வருவார். அதுதான் சச்சின் கிரிக்கெட் மீது வைத்திருக்கும் மரியாதை.

Advertisement

சச்சினின் சாதனைகள் தகர்க்கப்படும் என்றால் நிச்சயம் தகர்க்கப்படும். ஆனால் சச்சின் இந்தியாவில் மட்டுமல்ல உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொடுத்த அந்த சந்தோஷ தருணங்களை வேறு யாராலும் கொடுக்க முடியாது. இதுவரை கிரிக்கெட் விளையாடச் செல்லும் அத்தனை பேரும் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி... நீ என்ன பெரிய சச்சினா என்பதுதான்... அதனைக் கடக்காமல் எந்த கிரிக்கெட் விளையாட்டு காரர்களும் வந்திருக்க மாட்டார்கள்.

இப்போதுவரை சச்சினை போன்று கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வீரரும் விளையாடுகிறார்களே தவிர சச்சினைத் தாண்டி செல்ல வேண்டும் என்று யாரும் நினைத்தாக தெரியவில்லை. அதுதான் சச்சின் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்.

இன்றும் சச்சின் ரசிகர்களுக்கு சச்சின் ஆடிய ஷாட்கள் தான் அழகானது. சச்சின் விட்டு சென்ற இடம் அப்படியே தான் இருக்கும். சதம் அடித்த பின்னர் பேட் மற்றும் ஹெல்மெட்டை வானத்தைப் பார்த்து உயர்த்தும் அந்த அழகு, அந்த ஸ்டைல் வேறு எந்த கிரிக்கெட்டருக்கும் கிடைக்காது.

Advertisement

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம் என்றால், அதன் கடவுள் சச்சின் டெண்டுல்கர். கடவுளை பிடிக்காத கிரிக்கெட் ரசிர்களுக்கும் பிடித்த ஒரே கடவுள் சச்சின் தான். மாஸ்டர் பிளாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News