
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 34ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 116 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு இறுதி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ரோவ்மேன் பவல் முதல் மூன்று பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார்.
ஆனால் அடுத்தடுத்த பந்துகளில் ஓரிரு ரன்கள் மட்டுமே அடித்து விக்கெட்டை இழந்தார். இறுதியாக டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் அடித்த நிலையில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனிடையே, இறுதி ஓவரில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதாவது, 20ஆவது ஓவரில் ராஜஸ்தான் பந்துவீச்சாளர் மெக்காய் வீசிய மூன்றாவது பந்து பேட்டர் ரோவ்மேன் பவல் இடுப்பு உயரம் வீசப்பட்டு, கள நடுவர் நோ பால் கொடுக்காததால் மைதானத்தில் பெரும் சலசலப்பு நிலவியது.