
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. மேலும் இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனிலாவது கோப்பையை வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் (டெல்லி டேர்டெவில்ஸ்)
கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் என அறிப்பட்ட டெல்லி அணியானது கடந்த 2018ஆம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகள் வரிசையில் டெல்லி கேப்டல்ஸ் அணியும் இடம்பிடித்துள்ளது. அந்த வகையில் இதுவரை ஐபிஎல் தொடரில் 6 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் போனது. அதிலும் குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு ரிஷப் பந்த் தலைமையில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.