
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு சீசன்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும் இருமுறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அணி ‘ஹாட்ரிக்’ முறியாக மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்ர் ஷுப்மன் கில் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் குஜராத் டைட்டைன்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
குஜராத் டைட்டன்ஸ்
கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் வியக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த சீசனில் இறுதிப் போட்டி வரை சென்றது. எனினும் சிஎஸ்கேவிடம் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த இரு சீசனினும் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், தனது ஆல்ரவுண்ட் திறனாலும் அணிக்கு பெரிய பலமாக இருந்தார். ஆனால் இம்முறை ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றதுடன் அந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பு இளம் அதிரடி பேட்ஸ்மேனான ஷுப்மன் கில்லிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு சீசன்களிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்றாவது முறையாக இந்த சீசனிலும் இறுதிப்போட்டிக்கு செல்வதுடன், மீண்டும் ஒருமுறை கோப்பையை வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.