
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு சீசன்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும் இருமுறையும் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இரண்டு முறையும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்திலேயே வெளியேறியது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதன்படி இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேஎல் ராகுல் தலைமையில் தனது அறிமுக சீசனிலேயே குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் அந்த சீசனில் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்தது தொடரிலிருந்து வெளியேறியது. அதன்பின் கடந்த சீசனிலும் சிறப்பாக செயல்பட்டு குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ அணி, மீண்டும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் மீண்டும் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடவுள்ளது. அதற்கேற்றவாறு அணியை கட்டமைத்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது அணியின் பயிற்சியாளர் குழு உள்ளிட்டவைகளையும் மாற்றியுள்ளது. அதன்படி அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கரை நியமித்துள்ளது. இதனால் நடப்பு சீசனில் லக்னோ அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.