இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று (மார்ச் 07) நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே இங்கிலாந்து அணி இத்தொடரை இழந்துள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தங்களது 100ஆவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகின்றனர். மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல்லிற்கு வாய்ப்பு வழக்கப்பட்டுள்ளது.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், தேவ்தத் படிக்கல், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கே), பென் ஃபோக்ஸ், சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்