இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் கடைசி லீக் போட்டியானது இன்று நடைபெற இருந்தது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
கௌகாத்தில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த இப்போட்டியானது மழை காரணமாக தமதமானது. அதன்பின் இப்போட்டியானது 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
ஆனால் போட்டி தொடங்கும் முன்பு மீண்டும் மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியானது டாஸ் நிகழ்வோடு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.
இதன்மூலம் ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும், எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.