
வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் படுமோசமான தோல்வியைத் தழுவி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரானது 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்திருந்தது.
இந்நிலையில் அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்ததன் காரணமாக டாஸ் நிகழ்வானது தடைபட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 போட்டி டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெறும் அணியே தொடரை வெல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மறுநாள் (ஜூன் 14) பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியி வெற்றிபெறும் அணி தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.