முதல் பந்தில் சிக்ஸர்; அறிமுக போட்டியில் அசத்திய சூர்யவன்ஷி - காணொளி!

ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6ஆவது தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலின் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிர்ச்சி தோல்வியைத் தழுவி இருந்தாலும், அறிமுக வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அதன்படி, இப்போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் உறையவைத்தார். அந்தவகையில் இன்னிங்ஸின் முதல் ஓவரை ஷர்தூல் தாக்கூர் வீசிய் நிலையில், அந்த ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட சூர்யவன்ஷி மிட் ஆஃப் திசையில் இமாலய சிக்ஸரை பதிவுசெய்து தனது ஐபிஎல் வருகையை உலகிற்கு தெரியப்படுத்தினார்.
மேற்கொண்டு இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது. மேற்கொண்டு இப்போட்டியில் சூர்யவன்ஷி அறிமுகமானதன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் எனும் சாதனையையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது ஐடன் மார்க்ரம், ஆயூஷ் பதோனி ஆகியோரின் அரைசதம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 66 ரன்களையும், ஆயூஷ் பதோனி 50 ரன்களையும் சேர்க்க, அப்துல் சமத் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம் வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி 34 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 ரன்களையும், ரியான் பராக் 39 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.