ENG vs PAK: லிவிங்ஸ்டோன் அபார சதம்; பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்துதது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான முகமது ரிஸ்வான், பாபர் அசாம் அரை சதமடித்து அசத்தினர். ரிஸ்வான் 63 ரன்களும், பாபர் அசாம் 85 ரன்களும் எடுத்தனர். ஃபகர் ஸமான் 8 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹபீஸ் 10 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 24 ரன்கள் எடுத்தார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 232 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் டாம் கரன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.
அந்த அணியின் லிவிங்ஸ்டோன் தனி ஆளாக போராடினார். 17 பந்தில் அரை சதமடித்த அவர் 43 பந்தில் 9 சிக்சர், 6 பவுண்டரி என சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவுசெய்தார். மேலும் இங்கிலாந்து தரப்பில் அதிவேகமாக டி20 சதத்தை விளாசியவர் என்ற பெருமையையும் பெற்றார்.
இருப்பினும்103 ரன்கள் எடுத்திருந்த லிவிங்ஸ்டோன் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. மேலும் சிறப்பாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.