1st Test, Day 2: நியூசிலாந்து 307 ரன்னில் ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று புலவாயோவில் தொடங்கியது. இதில் டாஸை வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் கிரெய்க் எர்வின் 39 ரன்களையும், தஃபட்ஸ்வா சிகா 30 ரன்களையும், நிக் வெல்ச் 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் மேட் ஹென்றி 6 விக்கெட்டுகளையும், நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் டெவான் கான்வே இணை சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். இதில் கான்வே அரைசதம் கடக்க, முதல்நாளின் முடிவில் நியூசிலாந்து அணி 92 ரன்களை எடுத்திருந்தது. இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் வில் யங் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹென்றி நிக்கோல் 34 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின் சதத்தை நெருங்கிய டெவான் கான்வே 88 ரன்னில் ஆட்டமிழந்தர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் டேரில் மிட்செல் 80 ரன்களை எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 307 ரன்களை எடுத்தது. ஜிம்பாப்வே அணியில் பிளெசிங் முஸரபானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 156 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
Also Read: LIVE Cricket Score
அதன்பின், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் பென் கரண் 11 ரன்களிலும், பிரையன் பென்னட் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இரண்டாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்களை எடுத்துள்ளது. நிக் வெல்ச் 2 ரன்னுடனும், வின்சென்ட் மசேகேசா ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்க் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.