1st Test, Day 2: சதத்தை தவறவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்; முன்னிலை நோக்கி நகரும் இந்தியா!

Updated: Fri, Jan 26 2024 11:44 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோஸ் 70 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களையும், பென் டக்கெட் 35 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்குவதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வெ ஜெஸ்வால் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 119 ரன்களை எடுத்திருந்தது.

இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76 ரன்களுடனும், ஷுப்மன் கில் 14 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வெ ஜெய்ஸ்வால் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோ ரூட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில்லும் 23 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேஎல் ராகுல் 55 ரன்களுடனு, ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து இன்னும் 24 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி தனது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை