இந்த தவறினால் தான் நாங்கள் தோல்வியைச் சந்தித்தோம் - பாட் கம்மின்ஸ்!

Updated: Sat, Feb 11 2023 20:44 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும் எடுத்த ஜடேஜா பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் 70 ரன்கள் எடுத்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் மிக வேகமாக நகர்ந்து சென்று மாறிவிடுகிறது. இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் .அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது கடினமாக உழைக்க வேண்டும். 

இந்திய அணியில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினார். ஆடுகளம் முதல் இன்னிங்ஸின் போது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் பேட்டிங் செய்ய முடியாத அளவிற்கு கடினமாக இல்லை. நாங்கள் முதலில் இன்னிங்ஸில் ஒரு நூறு ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும். அது எங்களுடைய தவறுதான்.

இந்த ஆடுகளத்தில் முதலில் ரன் சேர்ப்பது கொஞ்சம் கடினமாக உள்ளது. இருப்பினும் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நான்கு பேர்கள் இன்னிங்ஸ் சிறப்பாக தொடங்கினார்கள். இனிவரும் ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் இன்னிங்ஸை தொடங்கி சில பந்துகளை தாக்குப்பிடித்த பிறகு பெரிய ஸ்கோர் ஆக மாற்ற வேண்டும். அறிமுக வீரராக களமிறங்கிய மர்ஃபி பிரமாதமாக பந்து வீசினார். இந்தப் போட்டியில் அவர்தான் என்னை மிகவும் கவர்ந்தார்.

எங்களுடைய அணி வீரர்கள் அதிக ஓவர்களை வீசி இருக்கிறோம். நாங்கள் மட்டும் கூடுதலாக ஒரு நூறு ரன்கள் முதல் இன்னிங்சில் அடித்திருந்தால் அது இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கும். இனி வரும் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தி விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை