இந்தியாவில் தான் ஐபிஎல் தொடர் நடைபெறும் - அருண் துமால் உறுதி!

Updated: Wed, Feb 14 2024 20:17 IST
Image Source: Google

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இத்தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் துபாயில் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது. இதில் ஆச்சரியப்படும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் காம்மின்ஸ் ஆகியோர் உட்சபட்ச விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 

அவர்களைத் தவிர்த்து நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முக்கிய வீரர்களும் பல்வேறு அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அதிலும் மிக முக்கியமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த இரு சீசன்கள் செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியதுடன் அந்த அணியின் புதிய கேப்டனாகவும் அறிவித்துள்ளது. 

இதனல் காரணமாக இத்தொடரின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதனால் எழுந்துவரும் குழப்பங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து பேசிய அவர், “தேர்தல் தேதிகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்படும். அதனால் நாங்கள் பொதுத்தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் வரை காத்திருக்கிறோம். அதன்பிறகே ஐபிஎல் தொடருக்கான திட்டமிடல்கள் தொடங்கும். இதற்காக இந்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம். எனினும், பெரும்பாலும் மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்க வாய்ப்புள்ளது. தேர்தல் தேதியை பொறுத்து எந்தெந்த மாநிலத்தில் போட்டிகளை நடத்துவது என்பது தீர்மானிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இந்தியாவில் தான் நடைபெறும் என்பதும், வரும் மார்ச் மாத இறுதியில் இத்தொடர் தொடங்கும் என்பதும் உறுதியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடரானது தேர்தல் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. மேலும் அத்தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை