2nd Test, Day 2: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சண்டிமால் 74 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதேசமயம் குசால் மெண்டிஸும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்தார். இதனால் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை குசால் மெண்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் குசால் மெண்டிஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் மெண்டிஸ் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 85 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் தலா 3 விக்கெடுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 21 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் 4 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜாவும் 36 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 91 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்த அலெக்ஸ் கேரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் இருவரும் அபாரமாக விளையாட ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலையும் பெற்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 36ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடி வந்த அலெக்ஸ் கேரியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்தது. இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள ஸ்டீவ் ஸ்மித் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 120 ரன்களையும், அலெக்ஸ் கேரி 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 139 ரன்களையும் சேர்த்துள்ளனர். இலங்கை தரப்பில் நிஷான் பெய்ரிஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 73 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.