2nd Test, Day 3: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்; வெற்றிக்கு அருகில் இலங்கை!
SL vs BAN, 2nd Test: கொழும்புவில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி வலிமையான ஸ்கோரை குவித்ததன் மூலம் வெற்றிபெறும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷாத்மான் இஸ்லாம் 46 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம், 35 ரன்களையும், லிட்டன் தாஸ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் சோனல் தினுஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் லஹிரு உதாரா 40 ரன்களுக்கும், தினேஷ் சண்டிமால் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 93 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரர் பதும் நிஷங்கா 146 ரன்களுக்கும் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரகளில் அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் 84 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 33 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 458 ரன்களைக் குவித்தது. வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளையும், நயீம் ஹசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இருப்பினும் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் அனாமுல் ஹக் 19 ரன்களுக்கும், ஷாத்மான் இஸ்லாம் 12 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மொமினுல் ஹக் 15 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - முஷ்ஃபிக்கூர் ரஹிம் ஆகியோர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சாண்டோ 19 ரன்களிலும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 26 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Also Read: LIVE Cricket Score
அடுத்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸும் 11 ரன்களைச் சேர்த்த கையோடு நடையைக் கட்டினார். இதன் காரணமாக மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் லிட்டன் தாஸ் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் தனஞ்செயா டி சில்வா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 96 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.