2nd Test, Day 3: கடின இலக்கை துரத்தும் இங்கிலாந்து;தோல்வியை தவிர்க்குமா இந்தியா?
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபார ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 396 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டனாது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 209 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ரெஹான் அஹ்மத், சோயப் பஷீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
அதன்படி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா 13 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் ரோஹித் சர்மா 13 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும் என அடுத்த ஓவர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சனிடன் விக்கெட்டை இழந்தனர்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களிலும், ராஜத் பட்டிதார் 9 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சதமடித்து அசத்தினார். பின்னர் அவருகும் 104 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த அஸ்கர் படேல் 45, ஸ்ரீகர் பரத் 9, அஸ்வின் 29 ரன்களிலும், மற்ற வீரர்கள் ரன்கள் ஏதுமின்றியும் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் டாம் ஹார்ட்லி 4 விக்கெட்டுகளையும், ரெஹான் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 399 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த பென் டக்கெட் 28 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்துள்ளது.
இதில் ஸாக் கிரௌலி 29 ரன்களுடனும், ரெஹான் அஹ்மத் 9 ரன்களுடனும் என களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து நாளை தொடங்கும் நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது.