வங்கதேச தொடரில் பும்ராவுக்கு ஓய்வு...அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
India vs Bangladesh Test 2024: இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு தேர்வுக் குழு ஓய்வு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தான் மீண்டும் அணியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களில் இருந்தும் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படும் பட்சத்தில் அவருக்கான மாற்று வீரராக இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
முகேஷ் குமார்
வங்கதேச டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், அவரது இடத்திற்கான முதல் தேர்வாக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகேஷ் குமார் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். மேலும் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அர்ஷ்தீப் சிங்
இந்த பட்டியலில் அடுத்த தேர்வாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் உள்ளார். இதுவரை இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அர்ஷ்தீப் சிங், இத்தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.மேலும் அர்ஷ்தீப் சிங் இதுவரை 16 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ் தீப்
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்த பட்டியலில் அடுத்த இடத்தை பிடிக்கும் வீரராக வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் உள்ளார். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும் அத்தொடரில் அவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வங்கதேச தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் ஆகாஷ்தீப் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.