அணியின் தலைமை இந்தத் தொடரில் என்னை ஆதரித்தார்கள் - சஞ்சு சாம்சன்!

Updated: Sun, Oct 13 2024 09:14 IST
Image Source: Google

இந்தியா -வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சேர்ந்து ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினர். இருவரின் அதிரடியால் அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் எகிறியது. அதுமட்டுமின்றி தொடந்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 22 பந்துகளிலும், சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளிலும் என தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தனர்.

அத்துடன் நிறுத்தாத சஞ்சு சாம்சன் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 40 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 111 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்க, 75 ரன்களில் சூர்யகுமார் யாதவும் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் ரியான் பராக் 34 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 47 ரன்களையும் சேர்க்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களைச் சேர்த்தது.

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் லிட்டன் தாஸ் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் லிட்டன் தாஸ் 42 ரன்களையு, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தாவ்ஹித் ஹிரிடோய் 63 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

இதனால் வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்களை மட்டுமே எடுத்தது.இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3, மயங்க் யாதவ் 2, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சஞ்சு சாம்சனும், தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்டியாவும் வென்றனர்.

இப்போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், "நான் நன்றாக விளையாடியதன் காரணமாக எங்கள் அணியில் உள்ள மற்ற அனைத்து வீரர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அங்கு என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வது வெறுப்பாக இருக்கும், ஆனால் என்னால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன்.  அதிக போட்டிகளில் விளையாடும் போது, அழுத்தங்கள் மற்றும் தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று எனக்கு தெரியும்.

ஏனெனில் நான் பல முறை தோற்றிருக்கிறேன். அதனால் நான் தற்சமயம் என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியும் என்பதை புரிந்து கொண்டு செய்ய வேண்டிய விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். நாட்டிற்காக விளையாடும் போது, அழுத்தம் நிச்சயம் இருக்கும். ஆனால், சிறப்பாக விளையாடி நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்கான செயல்முறையை எளிமையாக வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பந்தையும் எதிர்கொண்டேன்.

Also Read: Funding To Save Test Cricket

மேலும் கடந்த தொடரில் நான் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தேன். அதனல் நான் அந்த ஏமாற்றதுடன் கேரளாவுக்குத் திரும்பிச் சென்றேன், ஆனால் இந்தத் தொடரில் அவர்கள் என்னை ஆதரித்தார்கள். என்ன ஆனாலும் எனக்கு ஆதரவளிப்பதாக தலைமை தெரிவித்தது எனது கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு நான் புன்னகைக்க ஏதாவது கொடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை