இந்தச் சாதனையை அப்பாவுக்கு சமர்பிக்க விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையு, அறிமுக வீரர் சஃப்ராஸ் கான் 62 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அபாரமான சதத்தின் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் ஸாக் கிரௌலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500ஆவது விக்கெட்டை பதிவுசெய்து அசத்தியதுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் படைத்தார். முன்னதாக இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கும் நிலையில், அஸ்வின் 98 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
போட்டி முடிவுக்கு பின் பேசிய அஸ்வின், “இது ஒரு நீண்ட நெடிய பயணம். இந்தச் சாதனையை என்னுடைய அப்பாவுக்கு சமர்பிக்க விரும்புகிறேன். என்னுடைய வளர்ச்சி, சறுக்கல் என அத்தனை சமயங்களிலும் அவர் என்னுடன் இருந்திருக்கிறார். ஒவ்வொரு முறை நான் விளையாடுவதை பார்க்கையிலும் அவருக்கு நெஞ்சு வலியே வந்துவிடும். என் ஆட்டத்தைப் பார்த்து அவரது உடல் நிலையே கொஞ்சம் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும்.
இப்போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியை அவர்கள் ஒரு டி20 போட்டியை போல அணுகுகிறார்கள். எங்களை அதிகமாக சிந்திக்க வைக்கிறார்கள். நாங்கள் எங்கள் கையில் வைத்திருக்கும் திட்டத்தில் உறுதியாக இருந்து அதையே தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த விரும்புகிறோம். இந்த போட்டியில் முதல் மூன்று நாள்களுக்கு பிட்ச்கள் பேட்டருக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது.
அதேசமயம் 5ஆவது நாளில் பிட்ச் பேட்டிங் செய்ய கடினமாக மாறும். இங்கிலாந்து வீரர்கள் எங்கள் மீது அழுத்தம் ஏற்றியிருக்கிறார்கள். நாங்கள் ஒழுங்காகப் பந்துவீச வேண்டும். ஆட்டம் இப்போதைக்கு சமநிலையில்தான் இருக்கிறது. பக்குவமாகச் செயல்பட்டு ஆட்டத்தைக் கையிலிருந்து விலகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.