இந்தூர் மைதானம் டெஸ்ட்டிற்கு உகந்ததல்ல - மேத்யூ ஹைடன்!

Updated: Wed, Mar 01 2023 13:28 IST
3rd Test, Day 1: These Kinds Of Surfaces Are Not Good For Test Cricket, Says Hayden On Indore Pitch (Image Source: Google)

இந்தூரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது  டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா இருமுறை அவுட் ஆக வாய்ப்பிருந்த போதும் நடுவரின் தவறால் தப்பிப் பிழைத்தார். ஆஸி. அணியும் டிஆர்எஸ்ஸைப் பயன்படுத்தாததால் நல்ல வாய்ப்பை இழந்தது. எனினும் தலா 3 பவுண்டரிகளில் அடித்து 12 ரன்களில் ரோஹித் சர்மாவும் 21 ரன்களிலும் ஷுப்மன் கில்லும் ஆட்டமிழந்தார்கள். 

இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. கோலி மட்டும் அதிகபட்சமாக 52 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் எடுத்து மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா 1 ரன், ஜடேஜா 4 ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் டக் அவுட், பரத் 17 ரன்கள் என இதர பேட்டர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது. 6 ரன்களுடன் அக்‌ஷர் படேலும் 1 ரன்னுடன் அஸ்வினும் களத்தில் இருந்தார்கள்.  

இதற்குப் பிறகு இந்திய அணியின் மீதமுள்ள மூன்று விக்கெட்டுகளும் வீழ்ந்தன. அஸ்வின் 3 ரன்கள், உமேஷ் யாதவ் 17 ரன்களும் எடுத்தார்கள். சிராஜ் டக் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் 13 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 33.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. மேத்யூ குனேமன் 5 விக்கெட்டுகளும் லயன் 3 விக்கெட்டுகளும் மர்ஃபி 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

இந்நிலையில் இந்தூர் மைதானம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உகந்தது அல்ல என முன்னால் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஆறாவது ஓவரில் ஸ்பின்னர்கள் பந்து வீச வரக்கூடாது. இந்த வகையான மேற்பரப்புகளை நான் விரும்பாததற்கு இதுவே காரணம். முதல் நாளில் இந்த அளவு குறைவாக இருக்கக் கூடாது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா அல்லது இந்தியா வெற்றி பெறுமா என்பது முக்கியமில்லை.

இந்த வகையான மேற்பரப்புகள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. நான்கு-ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உங்களுக்கு அனுமதி உண்டு. இந்த வேகத்தில் போட்டி முடிவதால் ரசிகர்களுக்காக நான் வருந்துகிறேன், இந்த டெஸ்ட் 4ஆவது நாளுக்கு செல்லும் என்று நான் நினைக்கவில்லை. இதனால்தான் இந்த நிலைமைகளில் எனக்கு சிக்கல் உள்ளது. ஆறாவது ஓவரில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் வர வேண்டும் என்று உலகில் எந்த வழியும் இல்லை. 4.8 டிகிரி பந்து திரும்புவது என்பத் மிகப்பெரிய திருப்பம். ஏனெனில் மூன்றாம் நாள் நீங்கள் எதிர்பார்க்கும் திருப்பம் அது.

முதல் நாளில் நீங்கள் பேட்டர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். முதல் நாள், இரண்டாவது நாள் பேட்டிங் செய்ய வேண்டும். இது ஒரு சுழற்பந்து வீச்சாளர்களின் சொர்க்கமாக இருக்கக்கூடாது, அது தாழ்வாகவும், முதல் நாளில் ஒரு மைல் சுழலும் இருக்கக்கூடாது. விளையாட்டு இவ்வளவு விரைவாக முடிவை எட்டக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை