3rd Test, Day 3: இந்திய அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்; விறுவிறுப்பான கட்டத்தில் லார்ட்ஸ் டெஸ்ட்!
Lord's Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்த ஆல் அவுட்டானதுடன், ஸ்கோரையும் சமன்செய்தது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும், அதன்பின் களமிறங்கிய கருண் நாயர் 40 ரன்னிலும், கேப்டன் ஷுப்மன் கில் 16 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பந்த் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரகுல் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரிஷப் பந்தும் தனது அரைசதத்தை பதிவுசெய்த நிலையில் 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடித்து அசத்தி இருந்த கேஎல் ராகுலும் 100 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 32 ரன்களையும், நிதிஷ் ரெட்டி 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஸாக் கிரௌலி 2 ரன்களுடனும், பென் டக்கெட் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இதையடுத்து இரண்டு ரன்கள் முன்னிலையுடன் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.