இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும் எடுத்தனர்.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அபாரமான சதத்தின் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்களை குவித்தள்ளது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் 18 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோவ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட்டும் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

Advertisement

இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களைச் சேர்த்தது. இதில் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும், பென் ஃபோக்ஸ் 6 ரன்களுடனும் உணவு இடைவேளைக்கு பின் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற பென் ஸ்டொக்ஸ் 41 ரன்ளில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே பென் ஃபோக்ஸ் 1 3 ரன்களில் நடையைக் கட்டினார். 

பின்னர் களமிறங்கிய ரெஹான் அஹ்மத், டாம் ஹார்ட்லி, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா தாலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் 19 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்தார். 

அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 104 ரன்கள் எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹைர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய ராஜத் பட்டிதாரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். 

Advertisement

இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஷுப்மன் கில் 65 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 03 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட், ரெஹான் அஹ்மத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 322 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News