பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முந்தினம் ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

இத்தொடரில் ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சதத்தின் மூலமும், சர்ஃப்ராஸ் கானின் அரைசதத்தின் மூலமாகவும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளையும், ரெஹான் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இங்கிலாந்துக்கே உரித்தான பாஸ்பால் யுக்தியை பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விளாசி சதமடித்து விளாசினார். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஆனி பேர்ஸ்டோவும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 

இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் 151 பந்துகளில் 23 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 153 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களைச் சேர்த்தது. இதில் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும், பென் ஃபோக்ஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News