இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காத ஐந்து வீரர்கள்!

Updated: Sun, Jun 06 2021 14:54 IST
Image Source: Google

விராட் கோலியின் தலைமையில் டீம் இந்தியா தற்போது மிகச் சிறப்பாக செயல்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறது. 

ஆனால் சரியான ஃபார்ம் இல்லாததால் சில வீரர்கள் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் திணறி வருகின்றனர். அப்படி இந்திய அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட ஐந்து வீரர்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

கேதார் ஜாதவ் 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ். இவர் நீண்ட காலமாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி வந்தார். ஆனால் தொடர்ந்து தனது கிடைத்த வாய்ப்புகளை வீணடித்த ஜாதவ், மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடியாமல் தவித்து வருகிறார். கேதார் ஜாதவ் தனது கடைசி ஒருநாள் போட்டியை நியூசிலாந்திற்கு எதிராக கடந்த 2020ஆம் ஆண்டு விளையாடினார். அதன்பின் அவரால் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. இதுவரை இந்திய அணிக்காக 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜாதவ் 1,389 ரன்கள் எடுத்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். தோனிக்கு முன்பே இந்திய அணிக்குள் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக், அதன்பின் தோனியின் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். இருப்பினும் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறினார். அதன்பின் தற்போது வரை அவரால் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக தற்போது இவர் வர்ணனையாளராக வும் புது அவதாரம் எடுத்துள்ளார். 

ஜெய்தேவ் உனட்கட்

ரஞ்சி டிராபியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் டால் இடம் பெற முடியவில்லை. கடந்த 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக தனது கடைசி ஒருநாள் போட்டியையும், 2018 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக தனது கடைசி டி 20 போட்டியையும் விளையாடினார். இப்போது அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

சித்தார்த் கவுல்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல். தற்போது 31 வயதாகும் இவர் இந்திய அணிக்காக இதுவரை மூன்று ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அதிலும் அவர் ஒரு விக்கெட்டைக் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனியும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது இயலாத காரியமும் கூட.

முரளி விஜய்

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முரளி விஜய். தற்போது 37 வயதை எட்டியுள்ள முரளி விஜய், காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். ஆனால் அதன்பின் பிருத்வி ஷா, சுப்மான் கில் போன்ற இளம் வீரர்களின் வருகையால், முரளி விஜய்க்கு வாய்ப்பு அறவே இல்லாமல் போனது. இதுவரை இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முரளி விஜய் 3,982 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை