லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த இந்திய வீரர்கள்!

Updated: Thu, Aug 12 2021 12:58 IST
Image Source: Google

‘கிரிக்கெட்டின் மெக்கா’ என்ற புகழுக்குறிய மைதானம் லார்ட்ஸ். லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பல தவமிருந்து வருகின்றனர்.

ஏனெனில் இங்கிலாந்து அணிக்கெதிராக லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவது என்பது பிற நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு அவ்வளவு எளிதானது அல்ல. அப்படி இருக்கையில் அந்த மைதானத்தில் சதமடித்தால், அவர்களது மகிழ்ச்சி எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது. 

அப்படி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி சதமடித்த ஒன்பது இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்த தொகுப்பை இப்பதிவில் காண்போம்.

வினோத் மான்கட்

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் வினோத் மான்கட். லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் இவரையே சாரும். 1952ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததுடன் 184 ரன்களையும் குவித்து அசத்தினார். தற்போதுவரை லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னும் இதுதான். 

திலிப் வெங்கசர்கார் 

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மூன்று சதங்களை விளாசிய ஒரே இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றவர் திலிப் வெங்கசர்சகார். 1979ஆம் ஆண்டு லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்த வெங்கசர்கார், 1981 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் தனது அடுத்த இரண்டு சதங்களையும் பதிவுசெய்து அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 157.

குண்டப்பா விஷ்வநாத்

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான குண்டப்பா விஷ்வநாத், 1979ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 113 ரன்களை குவித்து அசத்தினார். 

ரவி சாஸ்திரி

தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ரவி சாஸ்திரி. இவர் 1990 ஆம் ஆண்டு லர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தனது சதத்தைப் பதிவுசெய்தார். 

முகமது அசாரூதின்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாரூதின் 1990 ஆம் ஆண்டு ரவி சாஸ்திரி சதமடித்த அதே போட்டியில், லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தனது சதத்தையும் பதிவு செய்தார்.

சௌரவ் கங்குலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமானவர் சௌரவ் கங்குலி. இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். மேலும் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

அஜித் அகர்கர்

இப்பட்டியலில் அஜித் அகர்கரின் பெயர் இடம்பெறுவது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். இந்திய அணியின் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அஜித் அகர்கர், 2002ஆம் ஆண்டு தனது பேட்டிங் திறனை நிரூபிக்கும் வகையில் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து அசத்தினார். 

ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்ற பெருமைக்கு சொந்தகாரரான ராகுல் டிராவிட்டும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 2011ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் லார்ட்ஸில் சதமடித்து அசத்தியாது யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. 

அஜிங்கியா ரஹானே

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் அஜிங்கியே ரஹானே லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இதுநாள் வரை சதமடித்த கடைசி இந்திய வீரராக இருந்து வருகிறார். அவருக்கு பிறகு இதுநாள் வரை எந்தவொரு இந்திய வீரரும் லார்ட்ஸில் சதமடிக்கவில்ல என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, விரேந்திர சேவாக் ஆகியோர் இதுநாள் வரை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் சதமடிக்காதது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை