ஐபிஎல் 2025: சதமடித்து சாதனைகளை குவித்த வைபவ் சூர்யவன்ஷி!

Updated: Tue, Apr 29 2025 09:41 IST
Image Source: Google

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியனது இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான சதத்தைன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்நிலையில் இப்போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் அரைசதத்தையும், 35 பந்துகளில் ஐபிஎல் சதத்தியும் பூர்த்தி செய்து அசத்தினார். இந்த 14 வயது வீரர் தனது இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் என மொத்தமாக 101 ரன்களைச் சேர்த்ததன் காரணமாக இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸின் மூலம் சூர்யவன்ஷி பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

டி20 போட்டியில் சதம் அடித்த இளம் வீரர்

ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனை விஜய் ஜோல் என்பவரின் பெயரில் இருந்தது, அவர் 2013 ஆம் ஆண்டு மும்பைக்கு எதிராக 18 வயது மற்றும் 118 நாட்களில் 109 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் தற்போது வைபவ் சூயவன்ஷி 14 வயதில் சதத்தைப் பூர்த்தி செய்து இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர்

ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் எனும் பெருமையையும் வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய யுசுப் பதான் 37 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்த நிலியில், தற்போது வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்து மிரட்டியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளம் வயதில் டி20 அரைசதம்

இதுதவிர்த்து ஆடவர் டி20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். முன்னதக கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆஃப்கானிஸ்தான் ஜாம்பவான் முகமது நபியின் 15 வயது மகன் ஹசன் இஸ்கில் டி20 கிரிக்கெட்டில் அரைசதம் அடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில் தற்போது வைபவ் சூர்யவன்ஷி அந்த சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.

 

ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்

ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர்களில் சூர்யவன்ஷி கூட்டாக முதலிடத்தை எட்டியுள்ளார். முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஸ்கேவின் தொடக்க வீரர் முரளி விஜய் 127 ரன்கள் எடுத்தபோது மொத்த்மாக 11 சிக்ஸர்களை விளாசி இருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. தற்போது வைபவ் சூர்யவன்ஷியும் 11 சிக்ஸர்களை விளாசி அவரது சாதனையை சமன்செய்துள்ளார்.

ஆட்டநாயகன் விருதை வென்ற இளம் வீரர்

இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக இந்தப் பட்டியலில், கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முஜீப் உர் ரஹ்மான் 17 வயது 39 நாட்களில் ஆட்ட நாயகன் விருதை வென்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 

இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 84 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 50 ரன்களையும், சாய் சுதர்ஷன் 39 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Also Read: LIVE Cricket Score

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து மிரட்டிய கையோடு விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 ரன்களையும், ரியன் பராக் 22 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை