PAK vs NZ, 2nd ODI: கான்வே அதிரடி சதம்; 261 ரன்களுக்கு நியூசி ஆல் அவுட்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கராச்சில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - கேன் வில்லியம்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. இதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே சதமடித்து அசத்தினார். இது அவரது இரண்டாவது சர்வதேச ஒருநாள் சதமாகும்.
அதன்பின் 92 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்சர் என 101 ரன்களை எடுத்திருந்த கான்வே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து மறுமுனையில் இருந்த கேன் வில்லியம்சன்னும் 85 ரன்களில் ஆட்டமிழந்து 15 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனைத்தொடந்து களமிறங்கிய டேரில் மிட்செல், டாம் லேதம், கிளென் பிலீப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல் என அனைவரும் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய மிட்செல் சாண்ட்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 ரன்களைச் சேர்த்து கடைசி ஓவரில் ரன் அவுட்டானார்.
இதனால் 49.5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.