அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றிபெற்று தொடரை வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி டப்ளினில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்தில் - ஃபின் ஆலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஆலான் 33 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வில் யங் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த கேப்டன் டாம் லேதமும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக விளையாடிய மார்ட்டின் கப்தில் சதம் அடித்து அசத்தினார்.
அவருக்கு துணையாக விளையாடிய ஹென்றி நிக்கோலஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், அரைசதமும் கடந்தார்.
பின்னர் 115 ரன்கள் எடுத்திருந்த கப்தில் ஆட்டமிழக்க, 79 ரன்களைச் சேர்த்திருந்த ஹென்றி நிக்கோலஸும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் கிளென் பிலீப்ஸ் தனது பங்கிற்கு 47 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 360 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து தரப்பில் ஜோஷுவா லிட்டில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடி வருகிறது.