PSL 2023: ரஷித் கான் பந்துவீச்சில் கலந்தர்ஸிடம் வீழ்ந்தது சுல்தான்ஸ்!

Updated: Sun, Mar 05 2023 09:42 IST
A comprehensive victory for Lahore Qalandars against the Multan Sultans!
Image Source: Google

பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - முல்தால் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஸமான் ரன் ஏதுமின்றியும், மிர்ஸா தாஹிர் 17 ரன்களிலும் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த அப்துல்லா ஷஃபிக் - சாம் பில்லிங்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபிக் 35 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சாம் பில்லிங்ஸ் அரைசதம் கடந்த கையோடு 35 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சிக்கந்தர் ரஸாவும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹுசைன் தாலத் 9 ரன்களிலும், ரஷித் கான் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வைஸ் 15 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை சேர்த்தது. முல்தான் அணி தரப்பில் அன்வர் அலி, இஷனுல்லா, அபாஸ் அஃப்ரிடி, கீரென் பொல்லார் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஷான் மசூத் - முகமது ரிஸ்வான் ஆகியோர் தொடக்கம் தந்தனர். இதில் ஷான் மசூத் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த உஸாமா மிரும் 17 ரன்களுக்கு நடைடைக் கட்டினார். இதையடுத்து 30 ரன்களைச் சேர்த்திருந்த முகமது ரிஸ்வானும் தனது விக்கெட்டை ரஸாவிடம் பறிகொடுத்தார். 

பின்னர் வந்த ரைலீ ரூஸோவ் 12, டேவிட் மில்லர் ஒரு ரன்னுக்கும் ஆட்டமிழக்க, கீரன் பொல்லார்ட் மட்டும் அதிரடியாக விளையாடிய் 39 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. லாகூர் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளிலும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை