INDW vs AUSW, 5th T20I: கடைசி போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 4 போட்டிகளில் 3-1 என ஆஸ்திரேலியா தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் பெத் மூனி (2), லிட்ச்ஃபீல்ட் (11) ஆகிய இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். கேப்டன் மெக்ராத் 26 ரன்களும், எல்லீஸ் பெர்ரி 18 ரன்களும் மட்டுமே அடித்தனர். ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய கார்ட்னெர் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஆகிய இருவரும் இந்திய பவுலிங்கை காட்டடி அடித்து அரைசதம் அடித்தனர்.
அதிரடியாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கார்ட்னெர் 32 பந்தில் 66 ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 35 பந்தில் 64 ரன்களும் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 4 ரன்களிலும், ஷஃபாலி வர்மா 13 ரன்களிலும், ஹர்லீன் டியோல் 24, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 12, ரிச்சா கோஷ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிறங்கிய தீப்தி சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, மறுமுனையில் தேவிகா வைத்யா, ராதா யாதவ், அஞ்சலி சர்வானி, ரேனுகா சிங் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்துபெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்களில் இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில், ஹீதர் கிரஹாம் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியதுடன், 4-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.