மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் - டேவிட் வார்னர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோரது அதிரடியான் ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்களைச் சேர்த்தது.
அதன்பி கடினமான இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு எதிர்பார்த்த துவக்கம் கிடைக்கவில்லை. பிரித்வி ஷா, மிச்சல் மார்ஸ் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். கீப்பர் சர்ப்ராஸ் கான் தட்டு தடுமாறி நான்கு ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவர்கள் மூவரின் விக்கெட்டையும் மார்க் வுட் தூக்கினார்.
நல்ல பார்மில் இருந்த ரைலி ரூஸோவ் 20 பந்துகளில் 30 ரன்கள், ரோமன் பவல் 1 ரன் அடித்து வெளியேற, 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. மறுமுனையில் நின்று கொண்டு போராடி வந்த கேப்டன் டேவிட் வார்னர் 56 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே அடித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணி. 20ஆவது ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்ஸ் கைப்பற்றி முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை பதிவு செய்தார் மார்க் வுட். ஐபிஎல் தொடங்கிய முதல் போட்டியிலேயே இத்தகைய படுதோல்வி சந்தித்ததற்கு என்ன காரணம் என்பதை போட்டி முடிந்தபிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் சற்று புலம்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “பவர் பிளே ஓவர்களில் எங்களின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை மிகவும் கட்டுக்கோப்பில் வைத்திருந்தனர். துரதிஷ்டவசமாக சில கேட்ச்களை தவறவிட்டது எங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடிந்தது. ஒரு கேட்ச் தவறவிட்டால் மேட்சை தவிர விடுவது போல என்பார்கள். திருப்புமுனையாக மாறிவிடும் அப்படித்தான் எங்களுக்கு இந்த போட்டியில் நடந்து விட்டது. தவறான நேரத்தில் கேட்சை தவறவிட்டோம். அதன் பிறகு ஆட்டத்திற்கு உள்ளேயே வர முடியவில்லை.
வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கைல் மேயர்ஸ் வெளுத்து வாங்கி விட்டார். அதிக பவர் மிக்க பேட்ஸ்மேன். அவர் அடிக்க ஆரம்பித்தால் நிறுத்துவது மிகவும் கடினம். கேட்சை விட்ட பிறகு அவர் எந்த தவறும் செய்யவில்லை.பந்துவீச்சில் மார்க் வுட் எங்களை முற்றிலுமாக திணறடித்து விட்டார். மீண்டும் ஒருமுறை தான் மிகச்சிறந்த பவுலர் என்பதை வெளிப்படுத்தி விட்டார். இந்த மைதானம் முதல் பாதியில் ஒருவிதமாகவும் இரண்டாம் பாதியில் வேறு விதமாகவும் செயல்பட்டது போல உணர்ந்தேன். அடுத்த போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. சொந்த மைதானத்தில் வெற்றியைப் பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.